சென்னை (ஆங்கில மொழி: Chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் முதல் மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி நிறுவப்பட்டது இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996-ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம், மதராசு பட்டினம், மெட்ராஸ் (Madras) மற்றும் சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.[23] சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை தென்னிந்தியாவின் வாசலாகக் கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை கோலிவுட் (Kollywood) என அறியப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம் ஆகும். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.
சென்னையின் பொருளாதாரம் பலதரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது. ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரி பாகங்கள் உற்பத்தியில் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அமெரிக்க ஆட்டோமொபைல் துறையின் தலைநகரான டெட்ராய்ட் போல இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் முன்னோடி நகரமாக விளங்கும் சென்னை “ஆசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுகிறது. சென்னை ஆண்டுக்கு 1.4 மில்லியன் அதாவது 14 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இங்கு ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 3 கார்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
நியூயார்க் டைம்ஸ் இதழின் 2014-இல் செல்ல வேண்டிய உலகின் 52 இடங்களின் பட்டியலில் சென்னை 26-வது இடத்தைப் பெற்றுள்ளது.[24]